MIC-Election-300x202   ROS-MIC-Logo

ம.இ.காவின் வேட்புமனுத்தாக்கலை, கிளைத்தலைவர்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். நடப்பு நிலையில், டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் அணி சட்டப்படி உயர்நீதிமன்றத்திலும், ஆர் ஓ எஸ் சினாலும், அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆக, இதை அடிப்படையாக வைத்து, டத்தோ ஶ்ரீ பழனிவேலின் ஆதரவாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யத் தவறினால், இருக்கும் கிளைகள், சட்டப்படி செயல்படாது.

எனவே, டத்தோ ஶ்ரீ பழனிவேலின் ஆதரவாளர்கள், தற்போது நடைமுறையில் இருக்கும், சட்ட விதிகளைப் பின்பற்றி, தங்களின் கிளைகளைக் காப்பாற்றுவதன் அவசியத்தை உணர்ந்து இந்த வார இறுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளைத்தலைவர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்வது மிக முக்கியமாகும். அதே வேளையில், தாக்கல் செய்யத் தவறினால், புதிய கிளைத் தலைவர்களாக,  அந்த கிளைகளின் உறுப்பினர்களே நியமிக்கப்படும் சாத்தியமும் இருக்கின்றது. டத்தோ ஶ்ரீ ஜி பழனிவேல் ஆதரவாளர்கள், 1000 முதல் 1500 கிளைகளிலிருந்து  வேட்புமனு தாக்கலை சமர்ப்பிக்க மாட்டார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், 150,000 முதல் 200, 000 வரை ம.இ.காவின் உறுப்பினர்கள், சட்டப்படி தங்களின் உறுப்பியத்தை இழந்து, ம.இ.காவின் உறுப்பினர் அல்லாதவர்களாக ஆகி விடுவார்கள்.

கட்சியில், எல்லாமே கிளைகளிலிருந்துதான் தொடங்குகிறது எனவே கட்சிக்கு கிளைதான் அடித்தளம். கிளைத்தலைவர்களாகிய நாம் நமது உரிமைகளை கட்சியின் நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் இந்திய சமூகத்திற்கு நம்  சேவையை திறம்பட தொடரவும் இந்த வேட்புமனுத்தாக்கல் முக்கியமாக அமைகிறது. ஆகவே, செராஸ், புடு உலுவின் கிளைத்தலைவர் எனும் அடிப்படையில், வேறு வேறு அரசியல் பார்வைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் வார இறுதியில், திரண்டு வந்து கிளைத்தலைவர்கள் வேட்புமனுத்தாக்கலைச் செய்து தங்களின் உரிமையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே வேளையில், தேசிய, மாநில, தொகுதி தலைவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யக்கூடாது என நிறுத்தினால், அது அவர்களின் சொந்த இலாபத்திற்கே தவிர, கட்சியின் நலனுக்காகவோ அல்லது சட்டத்தில் சொல்லப்பட்டதோ அல்ல என்பதைக் கிளைத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வேட்புமனுத்தாக்கலின் போது டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் ஆதரவாளர்கள், இந்த தருணத்தைப் பயன்படுத்தி, டத்தோ ஶ்ரீ ஜி பழனிவேலின்  ஆதரவளார்களை வேட்புமனுத்தாக்கலின் போது இடையூறு ஏற்படாமல்,  வேட்புமனுத்தாக்கல் சிறப்பாக நடைபெற வழிவகுக்க வேண்டும். தேர்தலின் போது எந்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாருக்கு ஆதரவினை வழங்க வேண்டும் என்கிற உரிமை அனைத்து உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. இது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். தேர்தலுக்குப் பிறகு, அனைவரும் ஒற்றுமையோடு கட்சியின் நன்மைக்காக, இந்திய சமூகத்திற்காக, நாட்டிற்க்காக உழைக்க வேண்டும். கிளைத்தலைவர்களே, உங்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமல், இந்த வாரம் உங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்வீர்.

 

மணிவண்ணன் இரத்தினம் A.M.P.
புடு உலு, செராஸ் கிளைத்தலைவர்,
கூட்டரசு பிரதேசம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *