kerusuhanmei1998

மலேசிய காகாசான் பேரவை வலியுறுத்து

கோலாலம்பூர் ஜூன் 8

1969 ம் ஆண்டு நடைபெற்ற மே 13 சம்பவம் மீண்டும் நடைபெறாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை என துணைப்பிரதமர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் கூறியிருந்த்து குறித்து தாம் கவலையும் அதிர்ச்சியும் அடைவதாக மலேசிய காகாசான் மன்றத்தின் தலைவர் மணிவண்ணன் ரத்தினம் கூறினார். நாட்டில் மே 13 சம்பவம் மீண்டும் நடைபெறாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லையென முகைதீன் யாசினை மேற்கோள்காட்டி அண்மையில் உத்துசான் செய்தி வெளியிட்டது.

மே 13 சம்பவத்தைக் குறிப்பிட்டு அச்சுறுத்துவோரை தேச எதிர்ப்பாளர்கள் என கருத வேண்டும் என்பதோடு இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மே 13 சம்பவத்தைக் குறிப்பிட்டு எவரும் அச்சுறுத்தல் மேற்கொள்ளும் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.  நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :

1969ம் ஆண்டு மே 13 சம்பவம் நடைபெற்ற போது நான் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகே நான் பிறந்தேன். நான் சிறுவனாக இருந்த போதும், எனது இளமை பருவத்திலும் மே 13 எச்சரிக்கையை பரவலாக கேட்டுள்ளேன். இந்த வார்த்தை அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஒரு வித பயத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

பொறுப்பற்ற அச்சத்தை ஏற்படுத்தும் தீவிரவாதிகள் மே 13 சம்பவத்தை குறிப்பிட்டு பேசுவதை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும் மே 13 சம்பவத்தை வைத்து மிரட்டுவோர் அல்லது அச்சுறுத்துவோரை இனம் மற்றும் சமய சார்பின்றி அவர்களை தேச விரோதிகளாக கருத வேண்டும்.

பெரும்பாலான மிதவாதிகள் அமைதியாக உள்ளனர். எனவே அவர்களது கருத்துகளும் மதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தங்களது கருத்துகளை தைரியமாக வெளிபடுத்தும் வகையில் பேச வேண்டும். மிதவாதிகள் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர். ஆனால் தீவிரவாதிகள் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையாளர்களாக திகழ்கின்றனர்.

மிதவாதிகளான நாங்கள அமைதி, ஐக்கியம், ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் தீவிரவாதிகள் பிளவுகளுக்காகவும், நெருக்கடி, வெறுப்புணர்வு மற்றும் சகிப்புத்தன்மையற்ற போக்கை ஊக்குவிக்கின்றனர்.

மிதவாதிகளான நாங்கள் ஐக்கியமும், அமைதியும், நல்லெண்ணம் மற்றும் சுபிட்சமான மலேசியாவை விரும்புகிறோம். நாட்டில் நமது சமூக அமைப்பை பிளவுபடுத்தும் மற்றும்மொற்றுமையை சீர்குலைக்கும் தரப்பினருக்கு எதிராக உறுதியான நிலையை எடுக்கும் பொறுப்பும் கடப்பாடும் அனைத்து மலேசியருக்கும் உள்ளது.

இன மற்றும் சமய தீவிரவாதத்தை நாம் நிராகரிக்க வேண்டும். இன மற்றும் சமய வெறுப்புணர்வை தூண்டுவோர் பதற்றத்தையும் நெருக்கடியையும் ஊக்குவிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதால் நாம் அவர்களை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்ட மலேசியர்கள் என்ற பல இன மக்களைக் கொண்ட நாட்டை மேம்படுத்தும் இலக்கை நோக்கி மலேசியர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும்.

எனவே நாட்டிலுள்ள பல இன மக்களிடையே பதற்றத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதற்கு இன மற்றும் சமய உணர்வுகளை தூண்டிவிடும் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தவறான நெறிமுறைகளை சமய மற்றும் அரசியல் ரீதியில் நியாயப்படுத்த முடியாது.

நாம் அனைவரும் ஒன்றுபட்ட மலேசியர்களுக்காக குரல் எழுப்புவோம் என ம.இ.கா தேசிய தகவல் பிரிவின் உதவித் தலைவருமான மணிவண்ணன் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!